அடடா மழைடா…….. அடை மழைடா!


     தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல், இன்பச் சாரல்!

     தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல், முத்துத் தூறல்!

     வெங்காட்டுப் பக்கக் கள்ளிச் சட்டென்று மொட்டு விட

     செங்காட்டுச் சிள்ளிச் செடி சில்லென்று பூவெடுக்க……………

“என்னங்க! 2010-ன் ஹிட் பாட்டைத் தலைப்பாகக் கொடுத்து விட்டு, 94-ன் ஹிட் பாட்டின் வரிகளை எழுதி இருக்கீங்களே! அதுவும் இங்க சென்னையில ஒரு ரெண்டு நாளைக்கு லேசா மழை பெய்ய ஆரம்பிச்ச உடனேயே ஒரே மழைப் பாட்டா பாடி அசத்தறீங்களே”ன்னு கேட்கிறீர்களா? ஒரு நிமிஷம்! முதல்ல சித்ரா, உன்னி கிருஷ்ணன் இணைந்து, ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடிய இந்த வைரமுத்துவின் வரிகளை மனதுக்குள் ரசித்துப் பார்த்தால், 94,95-களின் “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!” (அட! இன்னுமொரு பாடல் வரிகள்!). மழையின் தாக்கத்தை, கவிப்பேரரசு எவ்வளவு எளிதாகச் சொல்கிறார் என்றால் “தேனிக்குப் பக்கத்தில் வீசும் தென்மேற்குப் பருவக்காற்றின் சாரலும், தூறலும், வெண்காடு மற்றும் செங்காட்டில் இருக்கும் கள்ளிச்செடி, சிள்ளிச்செடிகளை மொட்டு விட்டுப் பூவெடுக்க வைக்கிறது” என்கிறார். (ஒரு சின்ன விண்ணப்பம்! அடியேன் புதுச்சேரி, சென்னை வாசியாதலால், கவிஞர் குறிப்பிட்டிருக்கும் வெண்காடும், செங்காடும் எங்கிருக்கின்றன என அறிந்திலேன்! நீங்க அந்த ஏரியா வாசியாக இருந்தால், அது குறித்த விபரம் எங்களுக்கு எழுதி அனுப்பவும். நன்றி!)

ஏன்னு சொன்னா, மே மாசம் வந்த வானிலை அறிக்கையில “நம் நாட்டின் பருவமழை வழக்கமான காலத்தில் பெய்யும்” அப்படீங்கறதைப் பார்த்தவுடன், மார்க்கெட் ஏறிச்சி. ஜூன் 20 வாக்குல வந்த அடுத்த அறிக்கையில “மழை இருக்கும்; ஆனால், வழக்கமான முழு அளவை விட சற்றுக் குறைவாகவே இருக்கும்” அப்படீங்கறதைப் பார்த்தவுடன் மார்க்கெட்டில் கொஞ்சம் சுருதி குறைஞ்சி இறங்கிடிச்சி. அதனாலதாங்க! மழையோ, மழைப் பாட்டோ மனதுக்கு மட்டும் இதமில்லீங்க! மார்க்கெட்டுக்கும்தான்! அது எப்படின்னு பாக்கறதுக்குத்தான், இந்த ஒரு சிறிய கட்டுரை. வாங்க பாக்கலாம்!

நமது இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது; இவ் விவசாயம், நமது நாட்டின் ஜி.டி.பி-யில் 25 சதவீதமாக உள்ளது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. இந்த உழவுத்தொழிலோ, மழை சார்ந்தது. நமக்கு உணவளிப்பதில் தென்மேற்குப் பருவமழையும் (ஜூன்-செப்), வடகிழக்குப் பருவ மழையும் (நவ-மார்) தங்கள் பணியை வருடா, வருடம் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆடிப் பட்டம் தேடி விதைஎன்பது நமது வழக்கு. இப்படிப் பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பருவமழையானது, பெய்யும் அளவில் குறைந்தாலும் அல்லது பெய்யாமல் பொய்த்து விட்டாலும் நமக்குத் திண்டாட்டம்தான்.

பெய்யாமல் பொய்த்து, உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் என்ற

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்ற இந்தத் திருக்குறள், மழையின் வாழ்வாதார அத்தியாவசியத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

பருவமழை வெளுத்துக் கட்டும்போது…

ஒரு விவசாயியின் பார்வையில்:

“ஆஹா! பேஷ்,பேஷ்! இந்த வருஷமும், ஆண்டவன் புண்ணியத்துல நல்ல போகமாக அமையனும்! போன வருஷத்து விளைச்சல்ல வாங்கின டிராக்டர் இப்ப உழறதுக்கு நமக்கு நல்ல உபயோகமா இருக்குது. மத்தவங்களுக்காக உழறதுல வரும் வாடகையும், நமக்கு நல்ல வருமானமா இருக்குது. எதிர் வீட்டு ராமசாமி அண்ணன் சொன்ன மாதிரி, இப்ப நல்ல, தரமான விதைகளையே வாங்கி, நம்ம விளைச்சலை அதிகரிச்சுக்கணும். அதேபோல, அப்பப்ப களை எடுத்து, நல்ல விதமாக உரம் போட்டு, பூச்சிகள் பாழ் பண்ணிடாம இருக்க சரியான பூச்சி மருந்துகளும் அடிச்சிடணும். நல்ல போகமா அமைஞ்சிடிச்சின்னா, அப்படியே கோவிலுக்குப் போய் நேர்த்திக்கடன் செஞ்சிட்டு வந்துடணும். இந்தத் தடவையாவது கண்டிப்பா வீட்டுல பெட்ரூமை /சி பண்ணிட்டு, பொஞ்சாதி கேட்டுக்குனே இருக்குற வெள்ளைக்கல் நெக்லஸ் வாங்கிக் கொடுத்துடணும். அப்பதான், மாமியார் வீட்டுப் பக்கம் நமக்கு மதிப்பா இருக்கும். அதே மாதிரி, டௌன்ல ஒரு வீடோ, இல்ல ஒரு ஃப்ளாட்டோ வாங்கிடணும். வாடகையாவது வரும். எதிர்வீட்டு அண்ணன் வேண்டுமானால் இந்த விளைச்சல்ல கார் வாங்கலாம். ஏன்னா, அவருக்கு என்ன மாதிரி மத்த செலவெல்லாம் ஏதுமில்ல. நமக்கு கார் வேணாம். வேணுமின்னா, நம்ம பைக்கை மாத்திடலாம். பக்கத்து ஊர்ல ஜனார்த்தனம் அண்ணன் போட்டிருக்கிற மாதிரி சொட்டுநீர்ப் பாசன ஸ்ப்ரிங்க்ளர் கூட போட்டுறலாம்”

அரசாங்கத்தின் பார்வையில்

“அப்பாடா! இந்த வருஷமும் மான்சூன் நல்லபடியா இருந்துடிச்சின்னா, விவசாய விளைச்சல் நல்லா இருக்கும். விவசாய விளைபொருட்கள் உற்பத்தி அதிகமாச்சின்னா, அரிசி, கோதுமை, சர்க்கரை விலை எல்லாம் குறைஞ்சிடும்; விலைவாசி கட்டுக்குள்ள வரும். பணவீக்கத்த நல்லபடியாக் குறைச்சிடலாம். பணவீக்கம் ஒரு கட்டுக்குள்ள வந்துடிச்சின்னா, ரிசர்வ் வங்கியோட வட்டி விகிதம் இறங்கிடும். புதுத் திட்டங்களுக்கான முதலீடுகள் தாராளமாகக் கிடைக்கும். நாமும் நம்ம பங்குக்கு பல்வேறு அணைகள், மின்சாரம், துறைமுகம், சாலை, இரயில், தொழிற்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம், பாசனவசதி சார்ந்த புதிய திட்டங்களை அமைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு மேலும் வழிமுறைகளை வகுக்கலாம். கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேலும் உயர்த்தலாம். கொஞ்ச நாளைக்கு எதிர்க்கட்சிகளும், பத்திரிக்கைகளும் “விலைவாசி உயர்வு, பணவீக்கம்” என்பதையெல்லாம் மறந்துடுவாங்க”

விவசாயம் சார்ந்த துறைகளின் பார்வையில்

“(மோட்டார் பம்ப் செட்டுகள், பைப், ஸ்ப்ரிங்க்ளர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பாளர்கள் & அவர்களைச் சார்ந்த கெமிக்கல்ஸ் நிறுவனங்கள்) மகமாயி கண்ணத் தொறந்துட்டா! இந்த வருஷமும் கண்மாயி, ஏரி, குளம், குட்டையெல்லாம் நெறஞ்சிடிச்சி. நாம நம்மளோட மார்க்கெட்டிங்க திறமையா செஞ்சி, சப்ளையத் தொய்வில்லாம கொடுத்து, சேல்ஸை அதிகமாக்கிக்கனும். நம்ம டீலர்களையெல்லாம் நல்லா ஊக்கப்படுத்தி, மார்க்கெட் ஷேரைத் தக்க வச்சிக்கோணும்”

உணவுப்பொருள் தயாரிப்பாளர்களின் பார்வையில்

(பிஸ்கெட், ப்ரெட், பழ ஜாம், பழ ரசங்க்ள், மைதா, ஆட்டா, ஸ்டார்ச் போன்ற மாவு வகைகள், சேமியா, சர்க்கரை முதலானவை) விவசாய விளைபொருட்கள்தான் நமது பிசினஸ்ஸின் மூலப்பொருட்கள். இந்த மூலப்பொருட்கள் உற்பத்தி அதிகமாகி, மிகச் சரளமாக, குறைவான விலையில் கிடைப்பதால், நமது உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். இலாப வரம்பும் (ப்ராஃபிட் மார்ஜினும்) உயரும். அது மட்டுமில்லாமல், கிராமப்புற வருவாய் அதிகரிக்க இருக்கும் நிலையில், நமது விற்பனையும் அதிகரிக்கும்

எஃப் எம் சி ஜி-க்களின் பார்வையில்

“வேறென்னங்க? நாங்க ரூம் போட்டெல்லாம் யோசிக்க மாட்டோமுங்க. மேலே இருக்கும் உணவுப்பொருள் தயாரிப்பாளர்களின் யோசனையேதான் எங்களுடையதும். நேரத்த வீணாக்காம நாங்க போய் உற்பத்திய அதிகரிக்கணுமுங்க. அப்ப வரட்டுங்களா?”

விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியாளர்களின் பார்வையில்

“நம்ம எக்ஸ்போர்ட் பிஸினஸ்ஸும் நல்லா இருக்குமுங்க. ஏன்னா, எல்லா உணவுப்பொருட்களும் எந்தத் தடையுமில்லாம, சல்லிசா ஜனங்களுக்குக் கிடைக்குமுங்க. அதனால, கவர்ன்மென்ட்டும் எக்ஸ்போர்ட்டுக்கு எந்தத் தடையும் விதிக்காதுங்க. எல்லாம் அந்த மாரியாத்தாவுக்கு வருஷா, வருஷம் ஆடி வெள்ளிக்கிழமையில கூழ் ஊத்துற மகிமையுங்க”

கால்நடை மற்றும் கோழி வளர்ப்புப் பண்ணையாளர்களின் பார்வையில்

“நம்ம பண்ணைக்கு வேண்டிய தீனியெல்லாம் சல்லிசா, விலை மலிவாகக் கிடைக்கிறதால, நல்லா தீனி வாங்கிப் போடலாங்க; செலவு குறையறதால, கடன் வாங்கி, வட்டி கட்டுற வேலை எல்லாம் இருக்காதுங்க. அதனால, லாப வரம்பும் நிச்சயம் ஒசந்துடுங்க!”

டிராக்டர் மற்றும் பண்ணைச் சாதனங்கள் உற்பத்தியாளர்களின் பார்வையில்

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல, மழை வருவது தெரிந்து விவசாயிகளும் நமது மெஷின்களை வாங்கத் தொடங்கி விட்டார்களே! இந்த வருடம் விற்பனையில் ஒரு ப்ளாக்-பஸ்டர் வருடமாக இருக்கும்”

பிக் டிக்கெட் ஐட்டங்கள் எனப்படும் ஏசி, ஃப்ரிட்ஜ், கார், பைக், ரியல் எஸ்டேட் சார்ந்தவர்களின் பார்வையில்

“ஒன்னு மட்டும் நிச்சயமுங்க! என்னதான் நம்ம கடைங்க எல்லாம் டௌன் பக்கமா வச்சி, சேல்ஸு, ரெவின்யூ, ப்ராஃபிட் எல்லாம் டௌன்லேயே பாத்துக்குனு இருந்தாலும், விவசாய மகசூல் அதிகரிச்சி, அதனால, கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரிச்சிதுன்னா, அவங்களோட வாங்கும் சக்தியும் அதிகரிக்குதுங்க. அதனால, “இந்த வருஷம், இந்த, இந்த ஐட்டம் எல்லாம் வீட்டுக்கு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா, அதுக்கப்புறம் அவங்க பேச்சை அவங்களே கேக்கமாட்டாங்க (என்னங்க! விஜய்யின் பன்ச் டயலாக் ஞாபகம் வருதுங்களா?). அந்த ஐட்டமெல்லாம் (காராகட்டும், பைக்காகட்டும், ஏசியாகட்டும்) கண்டிப்பா வாங்கிப் போட்டுடுவாங்க. அத ஏங்க கேக்கறீங்க? வீடு கூட கட்ட ஆரம்பிச்சிடுவாங்க.”

ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்கத்தின் உள் கட்டமைப்புத் திட்டம் சார்ந்த துறைகள்

(ஸ்டீல், சிமென்ட், இன்ஜினீயரிங்க் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் துறைகள்) “நமக்கு எல்லாம் டபுள் தமாகா”தாங்க. ஏன்னா, அரசாங்கமும் புதுப்புது வளர்ச்சித் திட்டங்கள போட்டிருக்காங்க; பொது மக்களும் வீடு கட்ட, வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. வேற என்னங்க வேணும்? எல்லாப் புகழும் அந்த வருண பகவானுக்கே!”

வங்கி மற்றும் வங்கி சார்ந்த துறைகள்

“ஆஹா! அரசாங்கம் நினைக்கிற மாதிரி விலைவாசி குறைஞ்சி, பணவீக்கம் ஒரு கட்டுக்குள்ள வந்துடுச்சின்னா, RBI-யும் இனி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமிருக்காது. இன்னும் சொல்லப்போனா, வட்டி விகிதங்களைக் குறைக்கவும் செய்வாங்க. இதுவே நமக்கு ஒரு கல்லிலே ஒரு மாங்காய்! மேலே சொல்லியிருக்கிற கம்பெனிகள் எல்லாம், டிமான்ட் அதிகமாகறதனால, தங்களுடைய பிஸினஸை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பார்கள்; அவ்வாறு செய்வதற்கு, குறைந்து வரும் வட்டி விகிதத்தினால், அவர்கள் நம்மிடம் வந்து கடன் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. நமக்கு கடன் வட்டி மூலம் மேலும் வருமானம் பெருக வாய்ப்புள்ளது. இது ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்!”

விபரம் அறிந்த முதலீட்டாளர்கள்

“ஆஹா! நமக்கு இந்த விவரமெல்லாம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துட்டாங்களே! சூப்பர்! இந்தத் துறைகள்ள இருக்குற லீடர்களாப் பாத்து செலக்ட் பண்ணி, நம்மளோட மழைக்கால முதலீட்ட ஆரம்பிச்சிட வேண்டியதுதான்”

இளநிலை முதலீட்டாளர்கள்

“என்னங்க இது! லிஸ்ட்டெல்லாம் நல்லாதான் இருக்குது! ஆனா, நமக்கு எப்படி ஸ்டாக் ஸெலக்ட் பண்றதுன்னு தெரியலையே! (எட்றா செல்லை…….. போட்றா நம்பரை…….) ஹலோ! உங்களோட அடுத்த “பங்குச்சந்தை விழிப்புணர்வுக் கருத்தரங்கம்” எப்பங்க?………… என்னது….. நம்ம ஊர்லேயேதான….. நல்லாக் கத்துக்கிட்டு முதலீட்ட ஆரம்பிச்சிட வேண்டியதுதாங்க! ரொம்ப நன்றிங்க!”

என்னங்க? நீங்க உங்க குடை, ரெயின் ஜாக்கெட்டோட ரெடியா இருக்கீங்களா?

– பாபு கோதண்டராமன்

கேள்வி ஞானம்: “இந்த லிஸ்ட்டெல்லாம் நல்லாதாங்க இருக்குது. ஆனா, ரோட்ல மழத்தண்ணி நிக்காம இருக்குங்களா?”

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: