வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 6


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

இதுவரையிலும், முடிவெடுத்தல் (Decision making) பற்றி

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3அத்தியாயம் 4

ஆகியவற்றிலும்,  செயல்படுத்துதல் (Execution) பற்றி

அத்தியாயம் 5 -இலும் பார்த்தோம்.

இப்போது, அடுத்ததாக வரும் மேனேஜ்மெண்ட் (Management) பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு சினிமாப் படக் காட்சியைப் பார்க்கலாம்.

படம்: தசாவதாரம்;
இடம்-சென்னை விமான நிலையத்தில், அமெரிக்காவிலிருந்து வந்த விஞ்ஞானி கமலை, “டண், டக்கு, டண், டக்கு” பின்னணி இசையுடன் “நாயுடு காரு” கமல் விசாரணை செய்யும் காட்சியில் வரும் ஒரு சிறிய பகுதி.
நாயுடு காரு: (விஞ்ஞானியின் தமிழ் தடுமாற்றத்தைப் பார்த்து) ஏமிய்யா? நானு ஆந்த்ராவிலிருந்து வந்து, தமிழக் கத்துக்கிட்டுப் பேசும்போது, நீ தமிழ்நாட்டுலேயோ பொறந்து, வளந்துட்டு தமிழ் பேசுறதுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டயேன்னா, தமிழ் எப்படிய்யா வளரும்?
விஞ்ஞானி கமல்: (கொஞ்சம் அவசரம், கொஞ்சம் பதற்றம், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் இயலாமை கலந்த பார்வையுடன் அவரைப் பார்த்து)….ஊஊம்ம்….. உங்களை மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாங்க, சார்!

இந்தக் காட்சியில வருவது மாதிரிதாங்க என்னோட நிலைமையும் இப்போது. தமிழ்ல எழுத ஆரம்பிச்சப்புறம், என்னென்ன கேள்விகள் மனசுக்குள்ளார வருது தெரியுங்களா?

மேனேஜ்மெண்ட்-க்கு “மேலாண்மை”யா? “மேலான்மை”யா? கொஞ்சம் (இல்ல, இல்ல; நிறையவே) கொழம்புதுங்க!

Management – மேலாண்மை

விதி 1: உங்களின் வணிக முதலீட்டை (Trading Capital) பத்து சமமான ரிஸ்க் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்

“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு, “நான் ஒரு சராசரி டிரேடர்” என்பதாகத்தான் பதிலிருக்கும். அவ்வாறிருக்கும் பட்சத்தில், நம்முடைய நிலையும், முதலீட்டுத் தொகையும் ஒரு சில வரைமுறைகளுக்கு உட்பட்டதாகத்தானிருக்கும். இதற்கு மாறாக, சந்தையோ, எண்ணிலடங்கா டிரேடர்களைக் கொண்டு ஒரு வலிமைமிக்க சக்தியாக விளங்குகிறது.

நாம் ஒரு ரூபாயைத் தொலைத்தால், சந்தையும்தான் தொலைக்கும். ஆனாலும், அதன் வலிமையின் முன் நாம் ஒரு சிறு துறும்புதான். அதனால்தான், நஷ்டங்களைக் குறைத்துக்கொள்ள நமது ரிஸ்க்-இன் அளவினைக் குறைப்பதே உத்தமம்.

முதலீட்டுத் தொகை ஒரு லட்சம் என்றால், இதனை 10 சம பங்குகளாக ரூ.10,000/- என்ற அளவில் பிரித்து, பத்து டிரேடுகளுக்கு வரும்படி வரும் படி டிரேட் சைஸ் அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு வகைக் கணக்கீடு.

இன்னொரு வகைக் கணக்கீடு எப்படியெனில், கையிருப்பில் ஒரு 10% மட்டுமே ஒரு டிரேடுக்கான முதலீடு என்பதாகும்.கணக்கீட்டைப் பார்ப்போம்.

ஆரம்ப முதலீடு – ரூ. 1,00,000 (விதி – ஒவ்வொரு டிரேடுக்கும் கையிருப்பில் 10% மட்டும் ரிஸ்க் கேபிட்டலாக முதலீடு செய்வது. நான் 10% என்று ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். அது 8%, 6%, 7% என்று எந்த அளவிலும் இருக்கலாம்)

முதல் டிரேடுக்கு: ரூ. 10,000  (அதாவது கையிருப்பான ஒரு லட்சத்தில் 10% என்ற இலட்சியத்துடன் நாம் இருப்பதால்; இதில் அலட்சியம் ஏதும் வேண்டாம்) உபயோகிக்கலாம்.

     முதல் டிரேடுக்குப் பிறகு தற்போதைய கையிருப்பு 90,000

2-ஆம் டிரேடுக்கு: ரூ. 9,000 (கையிருப்பில் 10%) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

     2-ஆம் டிரேடுக்குப் பிறகு தற்போதைய கையிருப்பு: ரூ. 81,000.

3-ஆம் டிரேடுக்கு: ரூ. 8,100 மட்டும்தான் நம்முடைய முதலீடாக இருக்கும் (ரூ. 81,000/-த்தின் 10%).

இப்போது, நீங்கள் ஏதேனும் பொசிஷனிலிருந்து வெளியே வந்து விட்டால், கையிருப்பு கூடும். அதற்குத் தகுந்தவாறு உங்களின் அடுத்த டிரேட் மதிப்பும் மாறும்.

கையிருப்புக்குத் தகுந்தவாறு, ஒரு குறிப்பிட்ட (மாறுபடாத) சதவிகிதத்தில் நம்முடைய டிரேட் சைஸ் மாறும் முறை புரியுதுங்களா? கையில காசு அதிகமா இருக்கும்போது, ரிஸ்க் கேபிடல் அதிகமாகுது; கையில பேலன்ஸ் கம்மியாகும்போது, ரிஸ்க் கேபிடலும் அதுக்குத் தகுந்த மாதிரி குறையுது.

(சாராம்சம்: ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்!)

விதி 2: ஒரு நல்ல டிரேடானது, ஆரம்பத்திலிருந்தே இலாபகரமாகத்தானிருக்கும்

ஒரு டே-டிரேடரின் அலுவலக நேரத்தில் (;-)), அவர் வாங்கிய (அல்லது விற்ற) ஸ்டாக்குகளின் விலையேற்ற, இறக்கங்கள் அவ்வப்போது இலாபத்தையோ, நஷ்டத்தையோ காட்டிக் கொண்டிருக்கும். இவையெல்லாம் சந்தையின் கூச்சல்கள் “Market noises” என்பதினால் ஏற்படக்கூடிய நிலையாகும்.

ஒரு டிரேடர், ஒரு ஸ்டாக் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதில் நஷ்டமடைகிறார் என்றால், ஒன்று அவர் வாங்கியது “ஹை”யாக இருக்கவேண்டும்; இல்லையெனில், ஒரு கீழிறக்கச் சந்தையிலே (Downtrending market) வாங்கியிருக்க வேண்டும்.

அதே, அவர் இலாபத்திலிருக்கிறார் என்றால், ஒன்று அவர் “லோ”-வில் வாங்கியிருக்க வேண்டும்; மற்றொன்று அவர் வாங்கிய இடத்திலிருந்து, மேலும் விலையேற அந்த ஸ்டாக்கிலே இன்னமும் வலிமை இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறு, ஒரு டிரேட் ஆரம்பத்திலேயே இலாபத்தில் செல்கிறதென்றால், அது மேலும் இலாபத்தைக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

(தொடரும்)

பங்கு: TITAN 20110826 மறுபார்வை (2)


TITAN பற்றிய ஜூலை 22-ஆம் தேதியிட்ட பார்வையை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

கவனத்தில் கொள்க: “டெக்னிக்கல் அனாலிசஸ் என்பது ஒரு கலை; கணிதமல்ல”

அதிலே, டைட்டன் ஒரு டபுள் டாப் அமைப்பில் இருந்து, (இ&ஆ-க்களில்) நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்களையும் பெற்று, 210 என்ற சப்போர்ட் லெவலை சார்ந்திருக்கிறது என எழுதியிருந்தேன்.

படம்: 20110826 TITAN - 210-ஐ உடைச்சிடிச்சி; அடுத்தது 183-தானா?

 

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், அந்த 210 சப்போர்ட் லெவல் உடைபட்டு, விலை கீழே சென்று, பிறகு மேலே வந்து மறுபடியும் அந்த (சப்போர்ட்டாக இருந்து இப்போது ரெஸிஸ்டன்சாக மாறியுள்ள) 210 லெவலை ரீடெஸ்ட் செய்தது. அந்த ரீடெஸ்டுக்குப் பிறகு, தற்போது மறுபடியும் கீழே செல்லத் துவங்கியுள்ளது.

நான் முந்தைய பதிவில் எழுதியுள்ள டார்கெட்டான 183 வரை கீழிறங்குகிறதா என்று இனிவரும் நாட்களில் கவனிக்கலாம்.

-பாபு கோதண்டராமன்

எப்டி இருந்த நான், இப்டி ஆகிட்டேன்? 20110826 HINDALCO


ஜூலை 4-ஆந்தேதி எழுதிய ஒரு பதிவில், ஜூன் 14 வரை இருந்த HINDALCO வரைபடத்தில் ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் (அதைப் படிக்க இங்கே’கிளிக்’) அமைப்பு உருவாகியிருந்ததாக எழுதினேன். இப்போது அது எந்த நிலையிலிருக்கிறது என்று பார்க்கலாம்.

படம்: 20110826 HINDALCO - எப்டி இருந்த நான், இப்டி ஆகிட்டேன்?

ஜூன் மாதத்தில் நெக்லைன் உடைபட்ட பிறகு, ஜூலை-யில் விலை மேலேறி, முன்னர் சப்போர்ட்டாக இருந்த நெக்லைனை ரீடெஸ்ட் செய்தது. அந்த ரீடெஸ்ட்டிற்குப் பிறகு, விலையானது கடந்த 19-ஆகஸ்ட் அன்று 128.20 என்ற “லோ” அளவு வரை வந்திறங்கியிருந்தது. நான் டார்கெட்டாக 125 வரை விலை கீழிறங்க வாய்ப்பிருக்கிறது என எழுதியிருந்தேன். இந்த HnS அமைப்பு ஒரு வெற்றிகரமான அமைப்பாக அமைந்துள்ளது. (நாம் எதிர்பார்த்தது போலவே ட்ரெண்ட் ரிவர்ஸ் ஆகியுள்ளது)

கவனத்தில் கொள்க: தங்கமே தங்கம்! என்ற பதிவில் அமைந்த HnS அமைப்பு தோல்வியில் முடிந்தது.

எனவே, “டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது ஒரு கலை; கணிதமல்ல” என்பதை நினைவில் நிறுத்தி முதலீடு செய்யவும்.

-பாபு கோதண்டராமன்

20110818 – தங்கம் (சரித்திரம் மறுபடியும் நிகழுமா?)


JK-வின் வணிகத்தின் விதிமுறைகளின் மூன்றாம் அத்தியாயத்தில் (History repeats itself) அரைத்த மாவே அரைக்கப் படுகிறது என்று பார்த்தோம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் ஒரு நீண்ட கால வரைபடத்தைப் பாருங்கள். 70-80களில் நடைபெற்றதே (ஒரு மாபெரும் எழுச்சி & அதற்குப் பின்னர் ஒரு சடாரென்ற ஒரு வீழ்ச்சி), அது இப்போது நடக்கவிருக்கிறதா? இது சாத்தியமா?

படம்: தங்கத்தில் அதே மாங்காய் மாலை, காசு மாலை, ஊசி மாலை, ஒட்டியாணம் டிசைன்கள்-தான் திருப்பி திருப்பிச் செய்யப்படுகின்றனவா?

லெட் அஸ் வெய்ட் அண்ட் வாட்ச்! (சும்மா பீட்டர் விட்டுக்கிட்டு இருக்கிறேன்னு நெனைச்சிடாதீங்க! பொறுத்திருந்து பார்க்கலாம்னுத்தான் சொல்றேன்)

-பாபு கோதண்டராமன்

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 5


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3அத்தியாயம் 4

இதுவரையிலும், முடிவெடுத்தல் (Decision making) பற்றி பார்த்தோம். இப்போது, செயல்படுத்துதல் (Execution) பற்றிப் பார்க்கலாம்.

செயல்படுத்துதல்

விதி 1: கே. பாலச்சந்தருக்கு “இரு கோடுகள்”; டிரேடர்களாகிய நமக்கு “இரு ஆர்டர்கள்”

ஒரு ஆர்டர் போட்டு, டிரேடுல என்ட்ரி ஆனவுடன், ஸ்டாப்லாஸ் ஆர்டர் போட்டுடனும்! இத நான் சொல்லலீங்க. 1922-லேயே தாமஸ் டெம்பிள் ஹாய்ன் (Thomas Temple Hoyne) என்பவர் தன்னுடைய “ஸ்பெகுலேஷன் – Speculation: Its sound principles and rules for its practice” என்ற புத்தகத்துல “நான் எப்பப்பெல்லாம் மார்க்கெட்ல ஆர்டர் போட்டு, பொசிஷன் எடுக்கிறேனோ, உடனுக்குடனேயே ஸ்டாப்லாஸ் ஆர்டரும் போட்டுடுவேன்” அப்படீன்னு சொல்லியிருக்கிறார். இதைத்தான் அவர் “இரண்டு-ஆர்டர் ரூல்” அப்படீன்னு சொல்றார். ஒரு ஆர்டர் என்ட்ரிக்கு; மறு ஆர்டர் ஸ்டாப்லாஸுக்கு.

“மார்க்கெட்டானது இப்படித்தான் போகும்; இல்ல, அப்படித்தான் அடிக்கும்” என்றெல்லாம் எப்படி வேண்டுமானாலும் நினைப்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாப்லாஸ் ஆர்டர்னு ஒன்றை எங்கேயாவது, ஒரு லெவலில் போட்டு வைக்க வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட விகிதாசாரம் (%) என்றோ, அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நம்பராகவோ இருக்கலாம். ஏனெனில், நிபுணத்துவம் வாய்ந்த டிரேடர்களெல்லாம் “தங்களுடைய ஸ்டாப்லாஸ் எது?” என்று நன்றாகத் தெரிந்துதான் டிரேடில் இறங்குவார்கள். அவங்களே அப்படீன்னா, நாமளும் அப்படித்தானே இருக்கோனும்!

விதி 2: சரியான ஆர்டர் முறைகளை பின்பற்றி டிரேடில் ஈடுபடவும்

என்னுடைய முக்கால்வாசி ஆர்டர்கள் முழுவதும் மார்க்கெட் ஆர்டர்கள்தான். நான் ஏதேனும் பொசிஷன் எடுக்கணும்னா, மார்க்கெட் ஆர்டர் போட்டு, அப்போது என்ன விலையிருக்கிறதோ அந்த விலையிலேயே டிரேட்-ஐ செயல்படுத்துவேன். (அப்பாடா! “செயல்படுத்துதல்” என்ற அத்தியாயத்துல “செயல்படுத்துவேன்” என்ற வார்த்தையை எப்படியோ கஷ்டப்பட்டு நுழைச்சிட்டேன்!) அதே மாதிரி, டிரேடுல இருந்து எக்சிட் ஆகணும்னாலும், மார்க்கெட் ஆர்டர் போட்டு, அப்போதிருக்கிற விலையிலேயே வெளியே வந்துடுவேன்.

“அதெல்லாம் முடியாது. நான் மத்த ஆர்டர் முறைகளையும் உபயோகிப்பேன்” என்று கூறுபவராக நீங்கள்? அப்படியானால், என்ட்ரிக்கு மார்க்கெட் ஆர்டரும், எக்சிட்டுக்கு மத்த ஆர்டர் முறைகளையும் உபயோகிக்கலாம்.

பாபு கோதண்டராமனின் குறிப்பு: “மத்த ஆர்டர் டைப்புகளா? ஒண்ணுமே புரியலையே!” அப்படீன்னு சொல்றீங்களா? நான் முன்னர் எழுதிய “ஷேர் மார்க்கெட் ஆர்டர்கள் – மார்க்கெட் & லிமிட் ஆர்டர்கள்” என்ற பதிவினை இங்கே கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.

அடுத்த வாரத்திலிருந்து, Management – மேலாண்மை பற்றி பார்க்கலாம். அதுலதான் மேட்டர் ரொம்ப ஜாஸ்தியாயிருக்குது. 🙂

(தொடரும்)

டைவர்ஜன்ஸஸ் (Divergences) 20110819


டைவர்ஜன்ஸஸ் என்றால் என்ன?

முன்னரேயே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். “கிளிக்” செய்து படித்துப் பார்க்கவும்!

இந்த வார முடிவில் (19-08-2011) கிடைத்துள்ள சில சார்ட்டுக்களை இங்கே விளக்குகிறேன்.

எச்சரிக்கை: இங்கே நான் குறிப்பிட்டுள்ள ஸ்டாக்குகளில் டிரேட் செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தலாம்! இதை ஒரு படிப்பினையாக மட்டும் எடுத்துக் கொண்டால் உத்தமம்! முதலில், இந்த டைவர்ஜன்ஸை வைத்து பேப்பர் டிரேட் மட்டும் செய்து பார்க்கவும்.

இங்கே நான் எதுவும் டிரேட் என்ட்ரி, டார்கெட் & ஸ்டாப் லாஸ் எதுவும் கொடுக்கவில்லை. இந்த டைவர்ஜன்ஸ் என்பது  ஒரு பொதுவான கருத்து. இது இரண்டு வகைப்படும்.

1. பாசிடிவ் டைவர்ஜன்ஸ்: விலை கீழே, கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “லோ”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) மேலே செல்வது.

2. நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்: விலை மேலே, மேலே ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “ஹை”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) கீழே செல்வது.

முதல் உதாரணமாக, எது டைவர்ஜன்ஸ் கிடையாதென்று ஒரு வரைபடம் பார்ப்போம். பிறகு, மற்றவையெல்லாம் எளிதாக விளங்குமென்று நினைக்கிறேன் (நான் நனைக்கிறேன், நீங்க காய வைச்சுடுங்க! :-))

படம் 1: டைவர்ஜன்ஸ் கிடையாது என்பற்கான விளக்கப் படம்

மற்ற படங்களை இப்போது பார்க்கலாம்.

படம் 2: 20110819 DEEP INDUSTRIES

இரண்டு சமநிலை “லோ”க்களில் (இரண்டு சிறிய அடிக்கோடுகள் போட்டுள்ளேன்) விலை அமைந்து, ஒரு டபுள் பாட்டம் போன்ற அமைப்பு உருவாகியுள்ள நிலையில், இ&ஆ – க்கள் எல்லாம் மேல் நோக்கிச் செல்கின்றன. (நீல நிறத்தில் மேல் நோக்கிய அம்புக்குறியிட்டுள்ள இடங்கள்). ஆகவே, இது ஒரு பாசிடிவ் டைவர்ஜன்ஸாகக் கருதப்படுகிறது. விலை மேலே செல்கிறதா என்று பார்க்கலாம். 

அடுத்தது

படம் 3: 20110819 ECE INDUSTRIES

இதுவும் முன்னர் சொல்லப்பட்ட DEEP INDUSTRIES போன்ற (சம நிலை “லோ”க்களில் விலை; இ&ஆ-க்கள் மேலே செல்வது) நிலையில் இருப்பதால், இதுவும் நமது பைனாகுலர் பார்வைக்குள் வருகிறது.

அடுத்தது:

படம் 4: 20110819 JAIPRAKASH ASSOCIATES

இந்தப் படத்துக்கும், நாட்டாமை அதே தீர்ப்புத்தான் சொல்றாரு!

படம் 5: 20110819 MALWA COTTON SPG MILLS

படம் 6: 20110819 PUNJAB CHEM

இந்த PUNJABCHEM-இல் விலையானது, சம நிலை “லோ”க்களில் இல்லாமல், “லோ”,”லோயர் லோ” என்று இன்னமும் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் போதே, இ&ஆ-க்கள் மேலே செல்கின்றன.

அடுத்தது:

படம் 7: 20110819 RUCHIRA PAPERS

விலை கீழே இறங்குகிறது. மூன்று இ&ஆ-க்களில் இரண்டு மேலே செல்கின்றன. RSI என்பது மேலே செல்ல வில்லையென்றாலும், விலையைப் போல கீழே செல்லாமல் சம நிலையில் “ஹோல்ட்” செய்கிறது. எனவே, இதுவும் ஒருவகையில் பாசிடிவ் டைவர்ஜன்ஸ்தான்.

ஆகவே, இந்த 7 (1+6) படங்களில் உள்ள ஸ்டாக்குகளையும் நீங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நன்றாகக் கவனித்து வாருங்கள். இந்த பேரிஷ் மார்க்கெட்டில் இந்த டைவர்ஜன்ஸ் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கலாம்.

(ஓகே! ஓகே! “முன்னமேயே JAGRAN டைவர்ஜன்ஸ் நம்மைக் கவிழ்த்துவிட்டதே” அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறதுதான். ஆனாலும் என்ன செய்வது? டெக்னிக்கல் அனாலிஸாஸோட அழகே இப்படி தப்பைச் சரியாகச் செய்து, பிறகு அதைச் சரி செய்வதுதானே!) எனக்கே ஒண்ணும் புரியல! உங்களுக்குப் புரியுதா? 😉

-பாபு கோதண்டராமன்

 

 

 

 

20110819 – நிஃப்டி


20110805 அன்றைய நிஃப்டி அலசலில், ஒரு பெரிய்ய்ய கீழ்ப்புறமான இடைவெளிக்குப் (Gap Down) பிறகு, யார் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள் என்பதை விட யார் “வீக்”காக இருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் என்று எழுதியிருந்தேன். 5200 லெவலில் இருந்த சப்போர்ட் உடைபட்டு ஒரு ரீடெஸ்டும் நடந்து, கரடிகளின் கையே ஓங்கியிருக்கிறது.

கீழே இருக்கும் படத்தில், ஒரு சப்போர்ட் உடைபட்ட பிறகு, ரீடெஸ்ட் நடந்து, அந்த சப்போர்ட் லெவலே எவ்வாறு ரெஸிஸ்டன்ஸாக மாறுகிறது என்பதைப் பாருங்கள்!

படம் 1: 20110819 நிஃப்டி - தின வரைபடம்

இப்போது, வார வரைபடத்தைப் பார்ப்போம். முன்னர் 20110722 நிஃப்டி வார வரைபடம் என்ற “ஃபிபோனாச்சி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்” என்ற பதிவிலே, 5150 உடைபட்டால், 4800 வரை வரலாமென்று ஏன் டி‌வி-க்களில் சொல்கிறார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

அதாவது, மார்ச் ’09 லோ-விலிருந்து நவம்பர் ’10 ஹை- வரை வந்த ஏற்றத்தின் 38.2% ஃபிபோ பின்னிழுப்பாக 4775 லெவல் இருப்பதால், 4800 வரை கீழே விழ வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. இப்போதோ, 4845 வரை கீழே வந்துள்ளது.

படம் 2: 20110819 நிஃப்டி வார வரைபடம் - ஃபிபோனாச்சி விளக்கம்

இந்த வார வரைபடத்திலே என்ன எதிர்பார்க்கலாம்? நாம் இன்னொன்றும் தெரிந்து கொள்ள வேண்டும். ஃபிபோனாச்சி-யில் 38.2% தவிர 50% & 61.8% என்ற விகிதங்களும் முக்கியமானவைகளாகக் கருத்தப்படுகின்றன. அப்படியானால்,

50% பின்னிழுப்பு – 4,300 என்ற அளவிலும்

61.8% பின்னிழுப்பு – 3,800 என்ற அளவிலும்

இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்படியானால், அந்த அளவிற்கு விழுமா? எனக் கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன், இப்போது, நாம் சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் லெவல்கள் எங்கெல்லாம் உள்ளன என்று பார்க்கலாம்.

ரெஸிஸ்டன்ஸ்:

இப்போதுதான், 5200 சப்போர்ட் லெவலை உடைத்துக்கொண்டு, மீண்டும் அங்கேயே ஒரு ரீடெஸ்ட் நடைபெற்று, மீண்டும் கீழே வந்துள்ளதால், நாம் அந்த 5150-5200 லெவலையே, மிக முக்கியமான ரெஸிஸ்டன்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

சப்போர்ட்: (வெளியிலிருந்தா, உள்ளேயிருந்தா? கவுத்துட மாட்டீங்களே?)

சப்போர்ட் என்ன இருக்குதுன்னு கொஞ்சம் லெஃப்ட்-டுக்காத் திரும்பிப் பாருங்க! அட! உங்களோட லெஃப்ட் இல்லீங்க; சார்ட்-டுல எங்கெங்கே சப்போர்ட் இருக்குதுன்னு. அக்டோபர் ’09, பிப்ரவரி ’10 & மே ’10 -க்களிளெல்லாம் இந்த 4750-4800 லெவல் நல்ல சப்போர்ட்டாகத்தான் இருந்திருக்கு. மேலும் இதே லெவலில்தான், தற்போதைய 200 வார EMA (சிகப்பு) & SMA (நீலம்) கோடுகளிரண்டும் 4830 லெவலில் இணைந்து, வார வரைபடத்தில் ஒரு சப்போர்ட்டாக இருப்பதைப் பார்க்கலாம்.

அதனால், 4,750-4850 லெவல் ஒரு சப்போர்ட்டாக இருக்க நல்ல வாய்ப்பிருக்கிறது. அதனால், கரடிகளின் சந்தையில் இப்போது ஒரு பின்னிழுப்பு நிகழுமானால், அது ரெஸிஸ்டன்ஸான 5150 வரை செல்ல வாய்ப்புண்டு.

-பாபு கோதண்டராமன்