மேலே… அதுக்கும் மேலே…. அதுக்கும் மேலே…


ஹலோ!

என்னங்க! மார்க்கெட் “அதுக்கும் மேலே… அதுக்கும் மேலே”ன்னு சொல்லிக்கிட்டே இன்னமும் மேலே போய்க்கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது, “அடடா! இது வரைக்கும் விட்டுட்டோமே! இப்பத்தான், இதுலத்தான், பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையெல்லாம் வித்தாவது நம்ம முதலீடு செஞ்சிட்டு, நிறைய (கொழுத்த) இலாபம் பார்க்கலாமே!”ன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? அப்படியே, நனைச்சிக் காய வையுங்க; ஷேர் மார்க்கெட்டுல இந்த மாதிரி சமயத்துலதான் புதுசா முதலீடு செய்ய வர்றவங்க வந்து மாட்டிக்கிட்டு, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீட்டினை இலாபமாகக் கொடுத்து விடுகிறார்கள்.

புரியலைங்களா? கீழேயிருக்கும் கேள்விக்கு உங்களின் பதில் என்ன? அதுவும் நீங்க இப்போதான் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் புதியவரென்றால், கண்டிப்பா இந்தக் கேள்விக்கு நீங்க பதில் சொல்லோணும்! சரியா?

இவ்ளோ நாள் (வருஷம்) ஏறாத பங்குச்சந்தையா இப்போது ஏற்றத்திலிருக்கின்றது?

“அச்சம் தவிர்! உச்சம் தொடு!” என்பது போல காளைகளின் ஆதிக்கம் இப்போது 8500-8600 புள்ளிகளில் நிஃப்டியினைக் கொண்டு சென்றுள்ளது. கீழேயிருக்கும் படத்தினைப் பாருங்கள்!

Nifty movements

இத்தனை வருடங்களும் பங்குச்சந்தை உயிரோட்டமாக இருந்து கொண்டுதானிருந்திருக்கின்றது. (ஷ்…அப்பாடா! எப்படியோ இந்த ஒரு நீளமான வார்த்தையை எழுதி விட்டேன்) ஆனால், அது நமது கவனத்தினை ஈர்க்கவில்லையே! தற்போது நிஃப்டி 8600-ஐத் தொட்டுள்ள நிலையில்தான் நம்மில் பலரும் பங்குச்சந்தையினைப் பார்க்க ஆரம்பித்துள்ளோம். அதுவும், அக்கம் பக்கத்தினர் சொல்லக் கேட்டோ, அல்லது அலுவலக நண்பர்கள் சொல்லக் கேட்டோ, அதுவுமில்லாமல் வேறு வழிகளில் பார்த்தோ, கேட்டோ “எப்படியாவது இதிலே முதலீடு செய்யவேண்டும்; சீக்கிரமே லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகவேண்டும்” என்கின்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளதா? அதுவும் “கமாடிட்டி, கரன்சி (ஃபோரேக்ஸ் – Forex) மார்க்கெட்டில் அன்றாடம் ஒரு ஐந்நூறு அல்லது ஆயிரம் பார்க்க முடியுமாமே” என்று உங்கள் கைகள் நம,நமவென்று அரிக்கின்றனவா? “டிரேடிங்ல, அதுவும் ஆப்ஷன் டிரேடிங்ல கொஞ்சமா போட்டு, பெருசா பாக்கலாமாமே”ன்னு மனசு பட்டாம்பூச்சி மாதிரிப் பறந்துக்கிட்டேயிருக்கா?

அப்படின்னா….

Stop sign 01

அதுவும், புதுசா, நவீனமா, ஹாபி போல டிரேடிங் பண்ணலாமுன்னு ஐடியா உங்களுக்கிருக்குதா? அப்படியிருந்தா, இந்த மாதிரி எண்ணத்தையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு சும்மா, கம்னு இருங்க! ஆமாங்க! இது ரொம்ப ஆபத்தானது; அதனாலதான் சொல்றேன் “சும்மா, கம்னு இருங்க”!

சரி! வேற எப்படிங்க பங்குச்சந்தையில நான் “தொபூக்கடீர்”னு குதிக்கிறது?

பேஸ்ஸிவ் இன்வெஸ்டிங்க் ஸ்டைல் (Passive Investing Style)னு ஒண்ணு இருக்குதுங்க. அதுதாங்க நம்ம அப்பா, அம்மா போஸ்ட் ஆஃபிஸ்ல கட்டிட்டு வந்த ஆர் டி (RD) மாதிரி. அதாவது அதிகமா (ரூம் போட்டு) யோசிக்கத் தேவையில்லை; மாசம் பொறந்தா பணம் கட்டிடணும்.இதுக்கு இன்னொரு, நவீன காலப் பேருதான் SIP-எஸ் ஐ பி (சிஸ்டெமெடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான்)

அதே மாதிரிதான் மாசா, மாசம் நம்மால முடிஞ்சத குறிப்பிட்டா நல்ல கம்பெனிகளா வாங்கிப் போட்டுக்கிட்டேயிருக்கணும். இன்னைக்கு வாங்கிட்டு நாளைக்கே 30 – 40 பர்சண்ட் எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் சும்மா ஒரு வருசத்துக்கு, இரண்டு வருசத்துக்கு வாங்கிட்டு நிறுத்திடக்கூடாது.

“அப்படின்னா? எவ்ளோ நாளைக்கு வாங்கணும்? மூணு வருஷம்?”

“அதுக்கும் மேலே….!”

“அஞ்சு வருஷம்?”

“அதுக்கும் மேலே…..!

” பத்து வருஷம்? ”

அதுக்கும் மேலே….!”

பதினஞ்சி வருஷம்?

“ஆமாம்!”

ஓ மை காட்! பதினஞ்சி வருசத்துக்கு மாசா, மாசம் வாங்கணுமா?

ஆமாங்க! அதுதாங்க டிசிப்ளின்! அப்புறம் கம்பெனி தர்ற டிவிடெண்ட்டை வைத்தும் அப்படியே அதே பங்கினை வாங்கிக்கோணும்.

உதாரணம்

டி‌வி‌எஸ் மோட்டார் (இது முன்னர் டி‌வி‌எஸ்-சுஸுகி என்றிருந்தது)

*2000 ஜனவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) -திற்கு வாங்கினால் எப்படியிருக்கிறதென்று பார்க்கலாம். நான் கணக்கீடு செய்வதை சுலபமாக்க மாதக் கடைசியில் வாங்குவதாக அமைத்துள்ளேன். ஏனெனில், அமிப்ரோக்கரில் மாதக் கடைசியில் க்ளோஸிங் விலை என்னவென்று ஈசியாகக் கண்டுபிடிக்கலாம். எனவேதான் மாதக் கடைசியில் வாங்குகின்றேன்.

*டிசம்பர் 2014 வரை பதினைந்து வருடங்களுக்கு.

*வாங்கும்போது புரோக்கரேஜ், பல்வேறு வரிகளுக்காக 2% செலவீனங்களையும் கூட்டியுள்ளேன்.

*ஜனவரி 31, 2000 அன்று முடிவு விலை 490.85. இத்துடன் 2% செலவீனங்களைக் கூட்டிய பிறகு, நம்மால் 9 பங்குகளை மட்டுமே வாங்க முடியும். அதற்கான மொத்தச் செலவு ரூ. 4506/- அப்படி வாங்கிய பிறகு மீதமுள்ள தொகை 494.00

*இந்த மீதித் தொகையினை அப்படியே வைத்திருந்து அடுத்த மாதம் 5000+494=5,494/-க்கு எவ்வளவு பங்குகள் வாங்க முடியுமென்று பார்ப்பேன். இதில் வரும் மீதத் தொகையினை அதற்கடுத்த மாத 5,000/-த்துடன் சேர்த்துக் கொள்வேன்.

*எவ்வெப்போதெல்லாம் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) கொடுக்கிறார்களோ, அதனையும் 5,000/-த்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

*ஸ்ப்லிட் மற்றும் போனஸ் பங்குகளும் இந்தக் கணக்கிலடங்கும்.

*டி‌வி‌எஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 2000 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் NSE-யில் வர்த்தமாகவில்லை போலும். அப்போதுதான் டி‌வி‌எஸ் நிறுவனம், சுஸுகி நிறுவனத்திடமிருந்து பிரிந்து வந்தது. அந்த 2 மாதம் x 5,000/-த்தினை ஆகஸ்ட் மாதம் உபயோகித்துள்ளேன்.

*கண்டிப்பாக இது ஓர் ஆய்வுக் கட்டுரைதான். டி‌வி‌எஸ்மோட்டார் பங்கினை வாங்கப் பரிதுரைக்கவில்லை. பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க்குகள் நிறைந்தது.

SIPping Stocks TVSMOTOR

என்னங்க? இதைப் பார்த்தவுடன், “நா……. ன்…. மெரசலாயிட்டேன்….”னு பாடத் தோணுதா? 2000-த்திலிருந்து 2014 வரை எத்தனை பாராளுமன்றத் தேர்தல்கள்? எத்தனை மாநிலத் தேர்தல்கள்? எத்தனை ஆட்சி மாற்றங்கள்? குரூட் ஆயில், டாலர், யூரோ, மெட்டல் விலைகளில் எத்தனையெத்தனை மாற்றங்கள்? ஆனால், இந்த SIP முறை முதலீட்டின் பலன்களை/பலங்களைப் பாருங்கள்!

இந்த மாதிரியான ஒரு கட்டுப்பாடான முதலீட்டாளராக உருவாக முயற்சி செய்யுங்கள்! புதியவர்களுக்கு டிரேடிங் வேண்டாமே!

அடுத்த கட்டுரையில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் SIP முதலீடு எவ்வாறு இருந்திருக்குமென்று பார்க்கலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

 

2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL

ஷேர் மார்க்கெட் ஆர்டர்கள் – மார்க்கெட் & லிமிட் ஆர்டர்கள்


நான் புதுமுக முதலீட்டாளராக என்னுடய தரகு நிறுவனத்தின் அலுவலகத்தில் டீலர் அருகில் உட்கார்ந்திருந்த சமயங்களிலெல்லாம், “ஸ்டாப் ஆர்டர் போடவா, லிமிட் ஆர்டர் போடவா” என்றெல்லாம் பேசிக்கொள்ளும்போது எனக்கு ஒன்றுமே தெரியாமலிருந்தது. அதெல்லாம் என்னவென்று இப்போது பார்க்கலாம்!

ஆர்டர்கள் இருவகைப்படும்

1. மார்க்கெட் ஆர்டர்

2. லிமிட் ஆர்டர்

மார்க்கெட் ஆர்டர் போட்டால், மார்க்கெட்டில் என்ன விலை போகிறதோ, அந்த விலையில் நம்முடைய ஆர்டர் எக்சிக்குயூட் ஆகும். அதாவது, மார்க்கெட்தான் நாம் டிரேடின் விலையை தீர்மானிக்கிறது. அதனால், நாம் நினைத்த (அல்லது திரையில் பார்த்த) விலையை விட சற்று கூடக் குறைய இருக்கலாம். இந்த விலை மாற்றத்தினால் வரும் நட்டத்தை “ஸிலிப்பேஜ்” என்கிறார்கள். இவ்வாறு ஸிலிப்பேஜ் நட்டம் இருந்தாலும் ஆர்டர் கண்டிப்பாக டிரேட் ஆகி விடும் என்ற கியாரண்டி இருக்கிறது.

லிமிட் ஆர்டர் என்றால், நாம்தான் ‘நம்முடைய இந்த டிரேட், இந்த விலையில்தான் நடக்க வேண்டும்” என்று தீர்மானிக்கிறோம். அதனால், ஸிலிப்பேஜ் நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த ஒரு குறிப்பிட்ட விலை வரும்போது நம்முடைய டிரேட் எக்சிக்குயூட் ஆகி, நம்முடைய ஸிலிப்பேஜ் நட்டம் ஏற்படாமல் காக்கிறது. அப்படியானால், இதுதான் சிறந்தது என்று நினைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் பொறுங்கள்! அந்த ஒரு குறிப்பிட்ட விலை வரும்போது என்பதை அழுத்தமாக எழுதியுள்ளேன். அதாவது, அந்த விலை வராமல் இருந்தால் என்ன நடக்கும்? எப்படி வராமலிருக்கும் என்கிறீர்களா? நீங்கள் குறிப்பிட்ட விலை, ஒரு கேப்-பிலோ அல்லது “டிக்” வராமலோ சென்று விட்டால், அந்த டிரேட் நடக்காமல், உங்களுடைய டிரேட் பெண்டிங்க்-கில் இருக்கும்.

உதாரணம் 1:
“அஆ” ஸ்டாக் ரூ.110-இல் டிரேட் ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை மார்க்கெட் ஆர்டரில் “BUY-வாங்க” ஆர்டர் போடும்போது, அது 110-லும் கிடைக்கலாம். அல்லது, 110.15 (அ) 110.60 (அ) 111.10 என்று அப்போது மார்க்கெட்டில் என்ன விலையில் கிடைக்கிறதோ, அந்த விலையில் வாங்கப்படும். இதேபோலத்தான், இதை மார்க்கெட் ஆர்டரில் “SELL-விற்க” ஆர்டர் போடும்போது, மார்க்கெட்டில், 110 (அ) 109.85 (அ) 109.45 என எந்த விலையிலும் அந்த ஆர்டர் டிரேட் செய்யப்படும்.

இதையே, நீங்கள் 110.20-இல் “லிமிட் BUY” ஆர்டர் போட்டிருந்தால், இந்தக் குறிப்பிட்ட டிக் வராமல் போனதால், உங்களின் ஆர்டர் பெண்டிங்க்-கில்தான் இருக்கும்.

அதே போல, 109.70-இல் “லிமிட் SELL” ஆர்டர் போட்டிருந்தால், அந்த ஆர்டரும் பெண்டிங்க்-கில்தான் இருக்கும்.

இதுதான் லிமிட் & மார்க்கெட் ஆர்டருக்குள்ள விசேஷங்கள்!

இப்போது ஸ்டாப் ஆர்டர் பற்றிப் பார்ப்போம்!
(கவனம்: இது ஸ்டாப் ஆர்டர் பற்றியது. இன்னமும் நாம் ஸ்டாப்லாஸ் ஆர்டருக்குப் போகவில்லை. எனவே, கன்ஃப்யூஷன் வேண்டாம்!)
இதுவாகப்பட்டது யாதெனில், நாம் நினைத்த ஒரு குறிப்பிட்ட விலையில்தான் அந்த ஆர்டர் எக்ஸ்சேஞ்சுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பொருள் கொள்ளலாம். இது மேலும் இரு உபபிரிவுகளாக “ஸ்டாப் BUY”, “ஸ்டாப் SELL” என இருக்கிறது.
உதாரணம்:
இப்போது “இஈ” கம்பெனியின் விலை 130-ஆக இருக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். 138 ரெஸிஸ்டன்ஸாக இருந்து, ஒரு பிரேக் அவுட் ஏற்பட்டால், நன்கு விலையேறும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால்,   “ஸ்டாப் BUY” ஆர்டர் போடலாம்.

அதாவது தற்போதைய விலையானது 130-இல் இருக்கும்போதே, 138-இல் “ஸ்டாப் BUY” ஆர்டர் போட்டுவிடலாம். விலை எப்போது 138-ஐ உடைத்துக் கொண்டு மேலே செல்கிறதோ, அப்போது உங்கள் ஆர்டர் “ஸ்டாப் BUY (மார்க்கெட்)” ஆர்டராக எக்ஸ்சேஞ்சுக்கு அனுப்பப்பட்டு, 138 (அ) 138.10 (அ) 138.55 என்று எந்த விலையிலும் டிரேட் நடந்து விடும். (மார்க்கெட் ஆர்டரில் டிரேட் கண்டிப்பாக நடக்கும்; ஆனால், ஸிலிப்பேஜ் இருக்குமென்று மேலே பார்த்தோமே, நினைவிருக்கிறதா?)
இதையே, “ஸ்டாப் BUY (லிமிட்)” ஆர்டர் 138-இல் போட்டு, லிமிட் பிரைஸ் 138.10 என்று போட்டீர்களேயானால், என்ன நடக்குமென்று பார்க்கலாம். விலை 138-ஐ உடைத்துக் கொண்டு மேலே செல்லும்போது, உங்கள் ஆர்டர் எக்ஸ்சேஞ்சுக்கு அனுப்பப்பட்டு, 138.10 வரும்போது (அந்தக் குறிப்பிட்ட விலையிலே) வாங்கப்படும். சப்போஸ், 138 உடைத்த பிறகு, அடுத்த டிக் 138.10 வராமல், 138.25; 138.50; 138.90; 139.40 என்று விலை “சர்ரென்று” மேலே செல்கிறதென்றால், உங்களுடைய 138.10 லிமிட் ஆர்டர் பெண்டிங்க்-கில்தான் இருக்கும். அந்த டிரேட் நடந்திருக்காது. (விலையை நீங்கள் நிர்ணயிப்பதால், அந்த விலை வரும்போது டிரேட் நடக்கும். அந்த விலையைத் தாண்டிச் செல்லும்போது டிரேட் நடக்காமல், பெண்டிங்க் வைக்கப்படும்)

“ஸ்டாப் SELL” ஆர்டரும் இதைப் போலத்தான்; “ஸ்டாப் SELL (மார்க்கெட்)”, “ஸ்டாப் SELL (லிமிட்)” என இருவகையில் நாம் ஆர்டர் போடலாம்.

இப்போது, ஸ்டாப்லாஸ் ஆர்டருக்கு வருவோம்!

இதுவும் பேஸிக்கா பார்த்தோமுன்னா, இதுவும் ஒரு ஸ்டாப் ஆர்டர்தான். என்ன இது நஷ்டத்தைக் கட்டுப்படுத்தற ஸ்டாப்லாஸ் ஆர்டரா இருக்குது. அதாவது, நீங்க “உஊ” ஸ்டாக்கில் ரூ. 330-இல் ‘ஷார்ட்’ டிரேட் எடுத்து, ரூ. 350-இல் ஸ்டாப்லாஸ் ஆர்டர் போட்டிருந்தால், விலை 350-ஐ உடைத்துக்கொண்டு மேலே செல்லும்போது, உங்களின் ஆர்டர் டிரிக்கர் ஆகி, மார்க்கெட்டில் என்ன விலை போகிறதோ (ஸ்டாப்லாஸ் மார்க்கெட் ஆர்டராக) அந்த விலையில் டிரேட் நடைபெற்றுவிடும்.
இதையே, ஸ்டாப்லாஸ் (லிமிட்) ஆர்டராக, 350-இல் போட்டு, லிமிட் பிரைஸ்-ஆக 350.25 என்று ஆர்டர் போட்டிருந்தால், 350 உடைபடும்போது, உங்களின் ஸ்டாப்லாஸ் ஆர்டர் 350-டிரிக்கராகி, எக்ஸ்சேஞ்சுக்கு அனுப்பப்பட்டு, (உங்களின் லிமிட் பிரைஸ்) 350.25 வந்தால் மட்டுமே உங்களின் டிரேட் நடந்தேறும். அப்படியில்லாமல், டிக்குகள் 350.05; 350.10; 350.55; 351.10; 350.30; 351.25 என்று “விர்ரென்று” சென்று கொண்டேயிருந்தால், உங்களின் “ஸ்டாப்லாஸ் லிமிட்” ஆர்டர் பெண்டிங்க்-கில்தானிருக்கும்.

எது வேணும் உங்களுக்கு? இதுவா (அ) அதுவா?

உங்களுக்கு “ஸிலிப்பேஜ் நஷ்டமானால் பரவாயில்லை; ஆர்டர் நடந்தேறினால் போதும்” என்றால் மார்க்கெட் ஆர்டர் போடலாம்.
“அதெல்லாம் இல்லை! நான் நிர்ணயிக்கும் விலையில்தான் டிரேட் நடக்க வேண்டும்” என்று லிமிட் ஆர்டர் போட்டால், டிரேட் நடக்காமலிருக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

அதிலும் விசேஷமாக, தற்போதைய மார்க்கெட் நிலவரத்தில் (அதிக ஏற்ற, இறக்கங்களுடன் இருக்கும் ‘ஹை வாலட்டிலிட்டி” நிலையில்) லிமிட் ஆர்டர் நல்லதா எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

-பாபு கோதண்டராமன்

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 1


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: அடியேன்தான்

ஒரு டிரேட் செய்கிறோமென்றால், அதிலே மூன்று விதமான செயல்பாடுகள் உள்ளடங்கியுள்ளன எனலாம். அவையாவன,

1.       டிரேட் பற்றி முடிவெடுப்பது (Decision Making)

2.       அதனைச் செயல்படுத்துதல் (Execution)

3.       பிறகு அதனைச் செம்மையாக வழி நடத்தி மேலாண்மை செய்தல் (Trade Management)

இவ்வாறு ஒவ்வொரு டிரேடும் இம்மூவகையானச் செயல்பாடுகளின் வரிசைக்கிரமப்படியே நடந்தாலும், பணம் சம்பாதித்துக் கொடுப்பதென்னவோ மூன்றாவதான “வழி நடத்தி மேலாண்மை செய்வது (Trade Management)” மட்டுமே.

1. முடிவெடுத்தல்

அனேக முதலீட்டாளர்கள் ஒரு டிரேட் (வாங்கவோ அல்லது விற்கவோ) எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? ஃபன்டமண்ட்டல் அனாலிசஸோ  அல்லது டெக்னிக்கல் அனாலிசஸோ கற்றுக்கொண்டு, அந்த ஆராய்ச்சிகளின் மூலம் ஒரு டிரேடில், “லாங்கோ” அல்லது “ஷார்ட்டோ” போகலாம் என்று முடிவெடுப்பார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள்! இந்த ஆராய்ச்சிகளைக் கற்றுக் கொள்ளும் காலமும் அதிகமாகும்; கற்றுக் கொள்ளும் முறைபாடுகளும் (வரைபட மென்பொருள், எக்ஸ்சேஞ்ச் விலை விபரம் பெறுவது (data), பேலன்ஸ் ஷீட், பிராஃபிட்&லாஸ் அக்கௌண்ட் போன்ற விபரங்கள்) கொஞ்சம் சிரமமாகத்தானிருக்கும். அதனால்தான், இந்த ஆராய்ச்சி வகைகளில் நிபுணத்துவம் பெற பல்லாண்டு காலமாகலாம். ஒரு டிரேடில் உள்ளடங்கியுள்ள இந்த முதல் வகைச் செயல்பாடு, பணம் ஈட்டித் தருவதற்கில்லை.

2. செயல்படுத்துதல் (Execution)

ஒரு டிரேடின் இரண்டாவதாக அமையும் இப்பகுதி, ஒரு மாதத்திற்குள்ளேயே கற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இந்தப் பகுதியும் பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்கில்லை. அதி முக்கியமாக டிரேடில் ஏற்படும் இழப்புகளைக் குறைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில், லாங்-கோ அல்லது ஷார்ட்-டோ நாம் நினைத்த விலையில் (ஸிலிப்பேஜ் -slippage எதுவுமில்லாமல்) அந்த டிரேடினை முடித்து விட வேண்டும். (லாங் அல்லது ஷார்ட் என்று) ஒரு டிரேட் எடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், அதனைச் செயல்படுத்த எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

3. கையிலிருக்கும் டிரேடை வழி நடத்தி மேம்படுத்துதல் (மானேஜ்மெண்ட் ஆஃப் பொசிஷன் – Management of Position)

டிரேடின் மூன்றாவதான இந்தப் பகுதி மட்டுமே, பணம் சம்பாதித்துக் கொடுப்பது,. இதில் விசேஷம் என்னவென்றால், இதைத்தான் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும். ஒரு டிரேடின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இந்த அதி முக்கியமான பகுதியில்தான், வெற்றியாளர்கள் நன்கு செயல்பட்டு ஜாம்பவான்களாகத் திகழ்கிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் ஒரு டிரேட் எடுக்க முற்பட்டால், ஃபன்டமண்ட்டல் அனாலிசஸ் அல்லது டெக்னிக்கல் அனாலிசஸ் அல்லது இரண்டும் கலந்த கலவை டெக்னோ-ஃபண்டா மூலமாகவோ என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுங்கள்; அந்த டிரேடை செயல்படுத்துங்கள்; கடைசியாக, “பணம் பண்ண வேண்டும்” என்ற ஒரு உத்வேகத்துடன் களமிறங்கி, உங்களது டிரேடை கவனமாக வழி நடத்துங்கள்.

பி.கு: நீங்கள் ஒரு டிரேட் எடுக்க வேண்டுமென்று ஆரம்பிப்பது, செல்வத்தின் வாயிலில் இருப்பதல்ல; அந்த வாயிலைச் சென்றடைவதற்கான வழியின் ஆரம்பத்தில்தான் அடியெடுத்து வைக்கிறீர்களென்று கவனத்தில் வைக்கவும். (வாசல் வேறு: வாசலுக்குச் சென்றடையும் வழியின் ஆரம்பம் வேறு)

பாபு  கோதண்டராமனின் ஒரு இடைச் செருகல்:

வழி மேல் விழி வைத்து

அடி மேல் அடி வைத்து,

இனி JK கூறப்போகும்

விதிகளைப் பின்பற்றி

நம் மேல் நம்பிக்கை வைத்து

வெற்றியாளராக மாறுவோம்!

வெற்றி நம் கையில்!

-தொடரும்

அடுத்த இதழில்: 

மேலே சொன்ன ஒவ்வொரு வகைக்கும் எந்தெந்த மாதிரியான வழி(விதி)முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போம்.