INFY gap up ஓபனிங்கும், ஆப்ஷன் கேள்விகளும்!


ஹலோ!

INFY-யின் காலாண்டு அறிக்கை வரும்போதெல்லாம் சந்தையிலே ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்படுகிறது. அதுவும், சமீபத்திய அறிக்கை வெளியீடுகளின்போது 10-லிருந்து 20 சதவீதம் வரை gap (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில், மிகப்பெரிய, அனுபவம் வாய்ந்த டிரேடர்கள் கூட மிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், கும்கி படத்திலே மாணிக்கத்துக்கு எருமை மாட்டை வைத்து ட்ரைனிங் கொடுப்பார் ஹீரோ. ஆனால் மாணிக்கமோ அந்த மாட்டைப் பார்த்து பயந்து ஓடிவிடும். இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே அனுபவம் வாய்ந்த. மிகப் பெரிய டிரேடர்கள் மிக ஜாக்கிரதையாக INFY அறிக்கை தினத்தைக் கையாள்கிறார்கள்.

20130712 INFY result to result KK Blog 

டெக்னிக்கல் அனாலிசிஸ் யாஹூ! குரூப்பில் வந்த ஒரு உரையாடலை இங்கே எழுது’கிறேன். ரொம்பவும் அருமையாகக் கேள்விகள் அமைந்து பல்வேறு டிரேடர்களும் அவரவர்களின் அபிப்பிராயங்களை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி! (I’m just a messenger)

மனீஷ் குப்தா: INFY 2550-இலிருந்தபோது 400 புள்ளிகள் உயருமென்று (காலாண்டு அறிக்கையினால்) எதிர்பார்த்தேன். அதனால், 11/07 அன்று 2900CE-ஐ 56.50 என்ற அளவிலே வாங்கினேன். 12/07 அன்று நான் எதிர்பார்த்ததைப் போலவே, INFY ஃப்யூச்சர் 2914 வரை சென்றது. ஆனால் 2900CE 62.05 வரை மட்டுமே உயர்ந்தது. நான் 60.05-இல் விற்று 3.50 மட்டுமே இலாபம் பார்த்தேன்.

இவ்வளவு பெரிய gap up இருந்தும், ஏன் 2900CE ஆப்ஷன் உயரவில்லை? நான் சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுக்கவில்லையா? ரிஸ்க் கம்மியாக எடுத்து Deep OTM வாங்குவதுதான் என்னுடைய எண்ணம்.

ஆப்ஷன் விலை நிர்ணயத்தினை பாதிக்கும் அம்சங்கள் என்ன?   

 

பிரசாந்த் கிரிஷ்: ஒரே வார்த்தையில் சொல்வதானால், Implied Volatility (ஐ‌வி) என்று சொல்வதுதான் உங்களது கேள்விக்குச் சரியான பதிலாக இருக்கும். சாதாரண சமயங்களில் இருக்கும் INFY-யின் volatility (ஏற்ற, இறக்கங்கள்)-யை விட, காலாண்டு அறிக்கை வரும் நேரங்களில் IV(ஐ‌வி) மூன்று மடங்காக இருக்கிறது. அறிக்கை வெளியான பிறகு IV(ஐ‌வி) மட,மடவென்று சரிந்து விடுகிறது.

இவ்வாறு ஐ‌வி மட,மடவென்று சரியும்போது, வாங்குபவர்கள் மட்டுமல்ல, ஆப்ஷன் விற்பவர்கள் கூட இலாபம் பார்ப்பதில்லை. நானறிந்த நண்பர் ஒருவர், ஒரு டஜன் 2500/2600 strangle வைத்திருந்து இலாபம் பார்த்தாலும் கூட, அவர் எடுத்த ரிஸ்குக்குத் தகுந்த இலாபமாக அது இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

மனீஷ் குப்தா: அப்படியானால் சரியான ஜோடி ஆப்ஷன்களை எப்படி  வாங்கி, விற்பது? இவ்வாறு IV (ஐ‌வி) மற்றும் gap up அல்லது gap down  வைத்து எவ்வாறு சரியான ஸ்டிரைக் ப்ரைஸ்-ஐ நிர்ணயிப்பது?

ஒரு சிலர் Deep OTM CE/PE-யை வாங்குங்கள் என்கிறார்கள்: ஒரு சிலர் இரண்டையும் விற்று விடுங்கள் என்கிறார்கள்.

ஆப்ஷன்கள் வாங்கவோ, விற்கவோ செய்யும்போது, ஒவ்வொரு ஸ்டிரைக் ப்ரைஸ்-உம் எந்த அளவிற்கு உயரும்/குறையும் என்று பார்த்து, ஒரு சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுக்க ஏதேனும் கணக்கீடுகள் உள்ளனவா? 

 

பிரசாந்த் கிரிஷ்: ஒரு gap up/gap down இருக்கிறதென்று எல்லோரும் எதிர் பார்க்கும்போது, ஆப்ஷன்களின் விலையும் அதற்கேற்றாற்போல உயர்கின்றன. எந்த அளவிற்கு உயருமென்பது, எவ்வளவு gap இருக்கிறதென்பதைப் பொறுத்தே அமைகிறது.

உதாரணத்திற்கு,INFY-யின் சென்ற காலாண்டறிக்கையின்போது,IV(ஐ‌வி) அந்தளவிற்கு உயரவில்லை; ஏனெனில், ஒரு 7-8%-தான் gap இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் அனைவரையும் ஆச்சரியப் படுத்தி விட்டு, ஆப்ஷன் எழுதியவர்களையும் (விற்றவர்கள்) நஷ்டப் படுத்தியது.

எந்த ஸ்டிரைக் ப்ரைஸ் வாங்குவதென்ற உங்களின் கேள்விக்கு, உங்களின் ரிஸ்க் எந்தளவிற்கு இருக்குமென்பதைப் பொறுத்துத்தான் என்பதே பதிலாக அமையும்.

In The Money (ITM) ஆப்ஷனின் Delta(டெல்டா) அதிகளவில் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது போல மார்க்கெட் ஓபன் சாதகமாக இருந்தால், உங்கள் இலாபம் அதிகளவில் உயர சாதகமாக உள்ளது. நீங்கள் Out of The Money (OTM)செல்லச் செல்ல, Delta-வின் பங்கு (IV-ஐ‌வி அதிகமாகும்போது) மிகவும் குறையும் (Vega-வேகா என்றொரு இன்னொரு அம்சம் இப்போது வரும்)

ஃப்யூச்சர் என்றெடுத்தால் விலை என்ற ஒன்று மட்டும்தான் பார்க்கவேண்டும். ஆனால், ஆப்ஷன் என்று பார்த்தால் அதிலே ஆறு பல்வேறு விதமான அம்ஸங்களைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இவற்றைத்தான் Greeks (கிரீக்ஸ்) என்று சொல்கிறார்கள். இவைகள்தான் ரிஸ்க் மற்றும் விலையைத் தீர்மானிக்கின்றன.

இந்த ஆறு அம்சங்களின் தாக்கத்தைப் புரிந்து கொண்டோமானால், நாம் முடிவெடுக்கலாம் – வாங்கவா? விற்கவா? என்று. இந்த முடிவெடுத்த பின்னர், சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுப்பது ரொம்பவும் எளிதாக இருக்கும். ஏனெனில், நீங்கள் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் ஸ்டிரைக் ப்ரைஸ் அமையும்.

 

ஹாரி சிங்: நான் ஐ‌வி போன்ற டெக்னிக்கல் வார்த்தைகளை உபயோகிக்க விரும்பவில்லை.

நீங்கள் ஏன் 400 புள்ளிகள் உயரும் என்றவொரு நிலையை எடுத்தீர்கள்? அது ரொம்பவும் அதிகமில்லையா?

#1. இன்று INFY 2800-இல் இருக்கும்போது, 400 புள்ளிகள் தாண்டி 3200CE வெறும் ரூ. 2/-இல் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதை வாங்குவீர்களா?

#2. ரிசல்ட்டுக்கு முன்னர் ITM ஆப்ஷன் 164 என்ற அளவில் இருந்தது. இப்போது 60 என்ற அளவிலே குறைந்திருப்பது ஏன்?

#3. Donald Rumsfeld “தெரிந்த தெரிந்தவைகள் இருக்கின்றன; தெரிந்த தெரியாதவைகள் இருக்கின்றன; தெரியாத தெரியாதவைகளும் இருக்கின்றன. ஆனால், தெரியாத தெரிந்தவைகள் இருக்கின்றனவா என்று மட்டும் தெரியவில்லை” என்று சொல்லியிருப்பார். (நான்: அட! என்னங்க? இவர் என்ன விசுவின் அண்ணனாக இருப்பாரோ? J) (There are known knowns, known unknowns and unknown unknowns. Not sure if there are unknown knowns)

Infy-யின் ரிசல்ட் இதிலே இரண்டாவது வகையான தெரிந்த தெரியாதவைகள் வகையைச் சேர்ந்ததாக அமைகிறது. நிறைய பேர் gap இருக்குமென்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனாலும், அதை வைத்து டிரேட் செய்ய விரும்பவில்லை. 

#4. நீங்கள் 400 புள்ளிகள் உயருமென்று எதிபார்த்தது போலவேதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதனாலேயே, ரிசல்ட்டுக்கு முன்னால் ஆப்ஷன் பிரிமியம் உயர்ந்தது. ரிசல்ட் வந்தபின்னர், தெரிந்த தெரியாதது),  தெரிந்த தெரிந்ததாக (known unknown has become known known) மாறி விட்டது. பிரிமியமும் கரைந்து விட்டது.

#5. இதையே இப்படிப் பாருங்களேன்! ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய லாட்டரி, ஒரு லட்சம் பேருக்குக் கிடைக்கும்போது என்னவாகும்? உங்களுக்காவது ஒரு பங்கு கிடைத்தது. நிறைய பேருக்கு டிக்கெட் காசு கூட மிஞ்சியிருக்காது.

 

அபிஜித் பிரபாகர்: இதனையே இன்னமும் சுருக்கமாச் சொல்ல வேண்டுமானால், .

நான் ஒரு இரண்டாடுகளுக்கு முன்னால், பங்குச் சந்தைக்குப் புதியவனாக இருந்தபோது, ஆப்ஷன்களில்தான் மிகவும் சுலபமாகவும், வேகமாகவும் பணம் சம்பாதிக்கலாமென்ற எண்ணம் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்லத்தான் “குறைந்த விலை ஆப்ஷன்கள் ITM-இல் வருவதில்லை; அப்படி குறைந்த விலை ஆப்ஷன்கள் OTM-இல் கிடைக்கும்போது, அவை worthless expiryஆகின்றன” என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்த்த திசையில் விலை சென்றாலும் கூட, ஐ‌வி மற்றும் Time Decay போன்ற Greeksஅந்த விலை குறைந்த OTM ஆப்ஷன்களை மிகவும் அதிகமாக பாதிக்கின்றனவென்றும் புரிந்து கொண்டேன்.

நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் லாட்டரி டிக்கெட் என்று வாங்கும் ரொம்பவும் விலை கம்மியான Deep OTM ஆப்ஷன்களை விற்பது யாரென்று. மிகப்பெரிய முதலைகள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்த ஆப்ஷன்களை hedging செய்கிறார்கள்.

ஆப்ஷன்களை வாங்குவதால் மட்டுமே இலாபம் பார்க்க முடியும்; ஆனால்…… அது ஒன்றும் நிறைய பேர் நினைப்பது போல ரொம்பவும் சுலபமானதல்ல.

 

ரமேஷ் ராமச்சந்திரன்: ஆப்ஷன்களை, அதிலும் மிகவும் குறிப்பாக OTM ஆப்ஷன்களை வாங்கும்போது, ஒரு நாளைக்கு மேல் கையில் வைத்துக் கொள்ளக் கூடாது. எப்படி இண்ட்ரா டே டிரேடிங்கில் ஆப்ஷன் வாங்கி விற்பது என்று பார்க்கலாம்.

12 ஜூலை 2013: நிஃப்டி ஃப்யூச்சர் 6000-க்கும் மேலே ஆரம்பமாகி, முந்தைய நாளின் ஹை-யான 5960-க்குக் கொஞ்சம் கீழே வரை சென்றது. பின்னர் 9:30-லிருந்து மதியம் 2:00 வரை அதே லெவலிலேயே ஒரு 14 புள்ளிகன் என்ற ரேஞ்சிலேயே(range) வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. நாளின் ஆரம்பத்தில் bearish-ஆக இருந்த நிலை, ஒரு range bound என்ற நிலைக்கு மாறியிருந்தது.

மதியம் 2:00 மணிக்கு ஒரு வலிமையான மேல் நோக்கிய மாற்றம் ஏற்பட்டு, ஒரு அரை மணி நேரத்திற்கு மறுபடியும் ஒரு 6 புள்ளிகள் ரேஞ்சிலேயே (ஆனால் முந்தைய 14 புள்ளிகள் டிரேடிங் ரேஞ்சுக்கு மேலேயே)  வர்த்தகமாகியது.

பிரேக்அவுட் டிரேடிங் ஸ்ட்ராடஜி படி பார்த்தால், ஒரு 30 புள்ளிகள் வரையிலும் உயர்ந்து 6000 லெவலைத் தொட வாய்ப்புள்ள நிலை. இந்த 5975 என்ற அளவிலே லாங் சென்றால், ஸ்டாப்லாஸ் 5960 (முந்தைய நாளின் ஹை). ரிஸ்க்; ரிவார்ட் என்பது 15:30 (1:2) என்ற அளவிலே இருப்பதால் இது ஒரு நல்ல டிரேடாகவும் அமைகிறது.

ஒருவேளை, இந்த டிரேட் தப்பாகி, 5960-க்குக் கீழே சென்றால், அந்த இறக்கமானது மிகவும் வலிமையாக இருந்திருக்கும். லாங் சென்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை, மற்றொரு ஷார்ட் டிரேட் எடுத்து  ஈடு கட்டிவிடலாம்..  

நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், இப்போது OTM 6000CE வாங்குவதற்கு மிகவும் சரியான சந்தர்ப்பம். இந்த OTM, நிஃப்டி நாம் எதிர்பார்த்த வகையிலே சென்றால், ITM-ஆக மாறி நல்ல இலாபத்தைக் கொடுக்கும் வாய்ப்பிது.

நிஃப்டி 5975-இல் இருந்த போது 60-லிருந்த 6000CE, நிஃப்டி 6000-ஐத் தொட்டபோது, 75-ஆக உயர்ந்திருந்தது.

அதாவது நிஃப்டியின் 30 புள்ளிகள் உயர்வீற்கு, ஆப்ஷன் 15 புள்ளிகள் உயர்ந்தது.

ஒரு லட்ச ரூபாயில் 200 நிஃப்டி ஃப்யூச்சர் (4 லாட்) வாங்கியிருப்பதாக வைத்துக்கொண்டால், இலாபம் = 200x30=6000

அதே 6000CE ஆப்ஷனில், 1500 (30 லாட்) வாங்கியிருப்போமேயானால், இலாபம் = 1500x15= 22,500 ரூபாயாக இருந்திருக்கும்.

நீங்கள் கையில் பொசிஷன் வைத்திருக்கும் காலம் கூடக் கூட, Time Decay-யினால் ஆப்ஷனின் மதிப்பு குறையும்.

ஆப்ஷன் டிரேடிங் என்பது ஒரு multi dimensional செயல்பாடு. அதன் ஒவ்வொரு அம்ஸத்தையும் புரிந்து கொண்டு, வெற்றி காண நேரமும், உழைப்பும் அவசியம்.

20130412 இன்போசிஸின் இன்றைய இறக்கம்


Infosys:
இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கை, வட கொரியாவின் போர் அறிவிப்பை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களாக வந்த வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த நம்மையும், அந்த வதந்திகளை நம்பி அதில் long பொசிஷன் எடுத்த முதலீட்டாளர்களையும் வடிகட்டின, அடி முட்டாள்கள் என்று இன்று வந்த இவ்வறிக்கை நிரூபித்துவிட்டது.

வீக்லி சார்ட்டினைப் பார்க்கும்போது, கடந்த வருடம் 2012, இதே ஏப்ரல் மாதம் 13-ஆந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தை ஒப்பிடும்போது அப்போது 15.7% வீழ்ந்திருந்தது. இதைத்தான் “History repeats itself” என்று சொல்கிறார்களோ!

padam 1: INFY 20120412 vs 20130413 fall

padam 1: INFY 20120412 vs 20130413 fall

டெய்லி வரைபடத்திலோ, 200 EMA&SMA-க்களுக்கு மிக, மிகத் தூரத்தில்,மேலேயிலிருந்த நேற்றைய முடிவு விலை, இன்று இந்த மிக முக்கியமான, அந்த இரண்டு MA-க்களுக்கும் நடுவே உள்ள சப்போர்ட் பட்டையை (2522 to 2625 price band), மிகவும் சர்வசாதாரணமாக (செல்போன் பேசிக்கொண்டே ரயில்வே டிராக்கைக் க்ராஸ் செய்கிறோமே, அது போல 😦 ) உடைத்துக் கொண்டு கீழே சென்று விட்டது.

padam 2: INFY-யின் இன்றைய இறக்கம் எல்லா சப்போர்ட்டுகளையும் போட்டுத் தாக்குத் தாக்கென்று தாக்கி விட்டதே!

padam 2: INFY-யின் இன்றைய இறக்கம் எல்லா சப்போர்ட்டுகளையும் போட்டுத் தாக்குத் தாக்கென்று தாக்கி விட்டதே!

ஆக்சுவலாப் பாத்தோம்னா, இந்த சப்போர்ட் zone-ஐ உடைக்கிறதுக்கு ரொம்ப வலிமை தேவை. எங்கேயோ இருந்த விலை, சுமார் 550 புள்ளிகள் வரை வீழ்ந்து இந்த zone-ஐ உடைச்சிருக்கிறதுனால, இன்ஃபோசிஸ் ரொம்பவே weak-ஆகிக்கொண்டு வருகிறதோ? அந்த அளவுக்கு அவர்களின் பலவீனம் வலிமை வாய்ந்ததாகி விளங்குகிறதோ?

படம் 3: தன்னந்தனியாய்..... !

படம் 3: தன்னந்தனியாய்….. !

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

20110803 INFOSYSTCH-இல் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் அமைப்பு


கீழேயுள்ள வார வரைபடத்திலேயே கொஞ்சம் விபரங்களை எழுதியுள்ளேன். புரிகிறதாவென்று பாருங்கள். படத்தில் எழுத இயலாதவைகளை அதற்குக் கீழே எழுதியுள்ளேன்.

படம்: இன்ஃபோசிஸ் வார வரைபடம் - ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் அமைப்பு

படத்தின் தொடர்ச்சி:

இவ்வாறு நடக்கும் ரீ-டெஸ்ட் யார், யாருக்கிடையே நடக்கும் போராட்டம் என்று நாம் பார்க்க வேண்டும்.

லாஜிக் பார்க்கலாம்!

நெக்லைன் சப்போர்ட்டில், காளைகள் விலை கீழே இறங்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், வலது ஷோல்டர் உருவாகும்போது, கரடிகளின் ஆதிக்கம் அதிகமாகி, தலையின் ஹை-யை விடக் கம்மிய்யான விலையில் டிரெண்டைத் திருப்பி விட்டார்கள். பிறகு, மறுபடியும் நெக்லைன் சப்போர்ட்டை அதிக வால்யூமுடன் உடைத்துக் கீழே இறக்கினார்கள். அவ்வாறு விலை இறங்கிய பிறகு, காளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, மறுபடியும் மேலே செல்லமுடியுமா என்று முயற்சி செய்யும்போது, முன்னர் சப்போர்ட்டாக இருந்த நெக்லைன் இப்போது ரெஸிஸ்டன்சாக (நடை சாத்தும் தடை நிலையாக) செயல்படுகிறது. கரடிகள் அனைவரும் இந்த ரீடெஸ்டின் போது ஒன்று சேர்ந்து “ஷார்ட்” டிரேட் மறுபடியும் எடுப்பார்கள். இதுதான் ரீடெஸ்ட் நடப்பதன் சாராம்சம்.

காளைகளைத் தவிக்க விட்டு, கரடிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸல் அமைப்புதான் இந்த ஹெட் & ஷோல்டர்ஸ் ஆகும்.

ஸ்டாப் லாஸ் (எந்தவொரு டிரேடுக்கும் இது ரொம்ப முக்கியம்), டார்கெட், டார்கெட் சோன் (இலக்கு மண்டலம்) முதலானவைகளைப் படத்திலேயே கொடுத்து விட்டேன். இந்த அமைப்பின் டிரேட் முறைகளை செயல்படுத்தும் முன், இதை நன்கு புரிந்து கொள்வதற்காக பேப்பர் டிரேட் செய்து பாருங்கள். மேலும், இது வார வரைபடமாதலால், இந்த அமைப்பு உருவாக ஒரு 11 மாதங்கள் ஆகியுள்ளன. டார்கெட்டை அடைய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் ஆகலாம். எனவே, இது நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறதென்று ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கலாம்!

குறிப்பு: “ஷார்ட்” டிரேட் என்ட்ரி – நெக்லைன் உடைபடும்போது, ரீடெஸ்ட் நடக்கும்போது, அல்லது இந்த இரு சமயங்களிலும். (ரீடெஸ்ட் சில, பல சமயங்களில் நடக்காமல் கூட இருக்கும்)

மறுபடியும் இன்னொரு குறிப்பு: ரொம்ப நாள் கழிச்சு எழுத ஆரம்பிச்சிருக்கேனா, அதனால ஒரு கோர்வையா எழுத வர மாட்டேங்குது. எதுனா புரியலைனா, கூச்சப் படாம தமிழ்லேயோ, இல்லன்னா இங்கிலீஷ்லேயோ ஒரு வரி எழுதுங்க! பதில் அனுப்பறேன்.

ஹெட் & ஷோல்டர்ஸ் பற்றி மேலும் (ஆங்கிலத்தில்) தெரிந்துகொள்ள

1. இங்கே “கிளிக்” ஸ்டாக்சார்ட்ஸ்

2. இங்கே “கிளிக்” இன்வெஸ்டோபீடியா

3. இங்கே “கிளிக்” யாஹூ பைனான்ஸ்